×

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் கோலாகலமான மாசிமக திருவிழா: குதிரை சிலைக்கு காகித மாலைகள் அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!!!

புதுக்கோட்டை: மாசிமகத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளமங்கலத்தில் உள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் மாசிமக திருவிழா கொண்டாடப்பட்டது. கோயிலில் உள்ள 33 அடி உயர குதிரை சிலைக்கு பக்தர்கள் வண்ணமயமான காகித மாலைகளை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆவத்துவாடி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் பக்தர்கள் உருளுதண்டம் எனும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோயில் முன்பு ஈரத்துணியுடன், தரையில் உருண்டபடி, பக்தர்கள் மீது கோயில் பூசாரி நடந்து சென்று நேர்த்திக்கடனை முடித்து வைப்பார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற அப்பர் தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சமணர்களால் கல்லில் கட்டி வீசப்பட்ட அப்பர் பெருமான், தெப்பமாக மிதந்ததை நினைவு கூறும் விதமாக, அவரது பெயரிலேயே தெப்பத்திருவிழா நடத்தப்படுகிறது. 108 வைணவ தலங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

சர்வ அலங்காரத்தில் அழகிய நம்பி சுவாமியும், தாயாரும் எழுந்தருளிய தெப்பம் 11 சுற்றுகள் வலம் வந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பழமையான கோயிலில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தபசுக் காட்சி நடைபெற்றது. தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில், சுவாமியை நினைத்து கடும் தவம் புரிந்த நாயகி அம்மனுக்கு சுவாமி பிரியாவிடையுடன் காட்சி அளித்த நிகழ்வு தபசுக் காட்சியாக நடத்தப்பட்டது.              


Tags : Goal Masimaka festival ,Tamil Nadu , Masimagam, Festival, Pudukottai, Horse Statue, Paper Garland, Devotees, Nerthikkadan
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...